Friday, March 16, 2018

ஸ்ரீவசநபூஷணம் தோன்றிய வரலாறு


ஸ்ரீவசநபூஷணம் தோன்றிய வரலாறு
thank :  Sri Sri Sri Yathiraja Jeeyar Parivar / Seshadri Venkatsan [FB]

எல்லாம் அறிந்தவரான பிள்ளைலோகாசார்யரை அடைந்தவர்களில் கூரகுலோத்தமதாஸர், மணற்பாக்கத்து நம்பி, கொல்லிக் காவலதாஸர், கோயிலண்ணர், திருவாய்மொழிப்பிள்ளையின் தகப்பனாரண்ணர், திருவாய்மொழிப்பிள்ளை அவருடைய திருத்தாயார், விளாஞ்சோலைப்பிள்ளை என்பவர்கள் முக்கியமானவர்கள்.
இவர்களில் மணற்பாக்கத்துநம்பி என்பவர் பேரருளாளருக்கு (காஞ்சி வரதராஜருக்கு) மிகவும் வேண்டப்பாடுடையவராயிருப்பர். அதனால் பேரருளாளர் அவர் கனவிலேயே சில அர்த்த விசேஷங்களை (சிறந்த அர்த்தங்களை) அருளிச் செய்து, 'நீர் ஸ்ரீரங்கம் சென்று இவ்வர்த்தங்களை அநுசந்தித்துக் கொண்டிரும். அங்கே இன்னும் விவரமாக அருளிச் செய்கிறோம்' என்றருள, அதன்படி மணற்பாக்கத்து நம்பியும் ஸ்ரீரங்கம் எழுந்தருளிப் பெருமாளைச் சேவித்துக் கொண்டு, பெருமாள் கனவின்படி அர்த்தங்களை அநுஸந்தானம் பண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு ஒருநாள் ஒரு கோயிலில் ஏகாந்தமாகப் பேரருளாளன் அருளிய அர்த்தங்களை அநுஸந்தித்துக் கொண்டிருந்த போது பிள்ளைலோகாச்சார்யரும் தம்மையடைந்த பெரியோர்களுடன் ஏகாந்தமாக அதே கோயிலில் எழுந்தருளியிருந்து அப்பெரியோர்களுக்கு பரம ரகஸ்யமான அர்த்தங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அவ்வர்த்தங்களை அருகிலிருந்த மணற்பாக்கத்துநம்பி கேட்டுப் பேரருளாளன் கனவில் தமக்கு அருளிய அர்த்தங்களும், இவ்வர்த்தங்களும் ஒன்றாயிருந்ததால் வெளிப்போந்து,'அவரோ நீர்' என்று சொல்லிக் கொண்டு பிள்ளைலோகாசார்யர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பிக்க, அவரை அணைத்தருளி விவரம் என்னவென்று பிள்ளைலோகாசார்யர் கேட்க, நம்பியும் தேவப்பெருமாள் கனவில் நியமித்தபடியை விண்ணப்பம் செய்தார். பிள்ளைலோகாச்சார்யாரும் அவரைத் தனக்கு அந்தரங்கராக்கிக் கொண்டு அவருக்கு சகலமான பரம ரகஸ்யார்த்தங்களையெல்லாம் அநுக்ரஹித்தார். மறுபடியும் தேவப்பெருமாள் மணற்பாக்கத்து நம்பியின் கனவில் தோன்றி "நம்முடைய நியமனத்தைப் பிள்ளைலோகாசார்யரிடம் தெரிவித்து அவர் அருளிச் செய்யும் அர்த்தங்களையெல்லாம் நூல் வடிவமாக்கச் சொல்லும்" என்று நியமிக்க, அப்படியே நம்பியும் பெருமாள் நியமனத்தை பிள்ளைலோகாசார்யரிடம் விண்ணப்பித்தார். பிள்ளைலோகாசார்யரும் பெருமாள் ஆணையைத் தலைமேல் தாங்கி உபதேசத்தாலே நம்பிள்ளை வழியாக வந்த அர்த்தங்களையெல்லாம் தன் பூர்வர்கள் ( முன்னோர்கள்) வார்த்தைகளைக் கொண்டே நூல் வடிவமாக்கிப் பெரியோர்களின் வசநங்களாலே தொகுக்கப்பட்ட பூஷணம் (ஆபரணம்) போன்ற நூல் என்று "ஸ்ரீவசநபூஷண" எனப் பெயர் சூட்டினார். இது விஷயமாகவே ஆசார்யஹ்ருதயம் எழுந்தது.
குருபரம்பரை வைபவம்



No comments:

Post a Comment