Wednesday, August 17, 2016

கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்



தமிழக ஜீவசமாதிகள் 44:

கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்....

அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் .

திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.

“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்

சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.

அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.

அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .

துண்டைக் கயிறாக்கியவர்

தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார்.

அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர். அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம்.

இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார். தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .

சொன்ன நாளில் சமாதி

ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் .

சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் .

அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.

அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் .

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் . அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.

“ சாதி யாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்”

“ சாதி பேத மோதுகின்ற தன்மை யென்ன தன்மையே”

என்று சிவவாக்கியர் கூறியது போல் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இந்து சமய நெறிகளின் படி நடைபெறும் பூசைகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நடத்தி வருவது சுவாமிகளின் திருவருள் என்றே கூறலாம்.

பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து நிற்கும் என்று திருமூலர் கூறியபடி மதுரை கா.ம. அலாவுதீன் ராவுத்தர் அவர்கள் தம் மனதில் குடிகொண்ட ‘ஸ்ரீமௌன குரு’ என்ற ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பிப் பூசித்துவந்ததால், ரெட்டி சுவாமிகளின் ஜீவசமாதியில் ராவுத்தரின் புகைப்படத்தை வைத்துப் பூசித்து வருகிறார்கள் . ஜீவசமாதியில் சிவமாக வீற்றிருக்கும் கற்றங்குடி ரெட்டி சுவாமிகளை நினைக்கும்போது அலாவுதீன் ராவுத்தரின் நினைவும் வருவதே இதற்கு சாட்சியாகும்

1 comment:

  1. Dear sir,

    Pls provide the address of Jeeva samathi.

    thanks,

    M Mohanraj

    ReplyDelete