Wednesday, June 8, 2016

சகுன சாஸ்திரம் -#1

சகுன சாஸ்திரம் -#1
late D.Jeybee ayya ..
https://jaybeestrishul11.blogspot.com/2011/10/sakuna-sastra-1.html

 சகுன சாஸ்திரம் என்னும் நுட்பக்கலை ஒன்று உண்டு. அவற்றில் ஒரு துறை, பறவைகள் கத்துவது, குறுக்கேயோ அல்லது முன்னாலோ எதிராகவோ போவது போன்றவற்றை வைத்து நல்லது அல்லது கெட்டதை வகுத்துச்சொல்ல வழிகாட்டுகிறது.
 செம்போத்து, ஆந்தை, கோட்டான், காகம் , கருடன் போன்ற சில பறவைகள் இந்தத் துறையில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
 இடமிருந்து வலம் செல்லல், வலமிருந்து இடம் செல்லல் என்ற கணிப்பு இருக்கிறது. அதுவும்கூட நேரத்துக்கு நேரம் மாறும்.

 சகுன நூல் ஒன்றிலிருந்து இரண்டு பாடல்களை மாதிரிக்குப் போடுகிறேன்:

 வலமாகச் சென்றால் சுப சகுனம் -

பசுவொடு புலியும் யானை பரிமளப் புனுகுப் பூனை
முசலொடு கோழி கள்ளிக் காக்கையும் மந்தி நாரை
விரையென நம்பும் புள்ளி மான் சுபமாது கொக்கு
நிஜமிது வலமாய் வந்தால் நினைத்தது ஜெயமாம் கண்டாய்


 இடமாகச் சென்றால் சுப சகுனம் -

காட்டில் வாழ் எருமை பன்றி கரடியும் குரங்கு மூஞ்சு
றோட்டமாம் நாயும் பூனை உடும்பொடு கீரிப்பிள்ளை
ஆட்டினற் கிடாவிமட்டை அரியவரெவரானாலும்
வாட்டமா மிடது பக்கம் வந்திடில் மிகவும் நன்றாம்


 நரியின் முகத்தில் விழிப்பது அதிர்ஷ்டமானது என்று நம்பப்படுகிறது.
 செட்டிநாட்டில் ஒருவீட்டில் - பிரம்மாண்டமான வீடு அது - அங்கு ஒரு கூண்டில் ஒரு சிறிய நரியை அடைத்து வைத்திருந்தார்கள்.
 இரவில் அது ஊளையிட்டிருக்குமே?
 ஒருவேளை அதற்கு ஏதாவது பங், போஸ்க்கா என்று என்னத்தையாவது போட்டுக்கொடுத்திருப்பார்களா?

 ஒரே வீட்டில் கருங்குரங்கு, கறுப்புப்பூனை, கருநாய் ஆகியவை இருப்பது குபேர சம்பத்தைத் தரும் என்று நம்பப்பட்டது. முறையூர் என்னும் ஊர். அங்கு ஒரு பெரிய வீடு. ஆனால் இடிந்துபோய்ப் பாழடைந்திருந்தது. அந்த வீட்டின் உரிமையாளராகிய செட்டியார், அந்த மூன்று மிருகங்களையும் வைத்திருந்தாராம்.

 அவர் காலத்திலும் அந்த மிருகங்கள் இருந்த காலத்திலும் நன்றாக இருந்திருக்கும்போலும்.  சகுனநூல் என்பது அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று.   நிமித்த சாஸ்திரம் என்பதும் இதே வகைதான். ஒரே கலைதான் என்றுகூடச் சொல்வார்கள்.
 நிமித்தசாஸ்திர வல்லுநர்களை 'நிமித்திகர்' என்று குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாழிகைக்கும் பலன் சொல்வதுகூட அரசவையில் இருந்த நிமித்திகர்களுக்கு வேலையாக இருந்தது.  நாழிகைக் கணக்கர் என்றொரு அலுவலர் பிரிவினர்கூட இருந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற அலுவலர்கள் பிற்காலத்தில் இல்லாமலேயே போய்விட்டனர்.

 அந்த சாஸ்திரமும்கூட தேய்ந்து, கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. ஆனாலும் இன்னும்கூட பல்லி சொல்லும் பலன், காகம் கரையும் பலன், பல்லி விழும் பலன் போன்றவை இருக்கத்தான் செய்கின்றன.
 இன்னும் சில விபரங்கள் இருக்கின்றன. அவற்றையும் விளக்கலாம்.  இந்த மாதிரியான விஷயங்களை முன்பெல்லாம் எழுதுவதுண்டு.  ரொம்பவும் விரிவாக எழுதிவிட்டால், நான் எழுதியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சாஸ்திரத்தைத் தாம் கற்றுவைத்திருப்பதாகச் சொல்லி, பணம் பண்ணுபவர்கள் மலேசியாவில் இருக்கிறார்கள்.
 அதனாலேயே எழுதுவதற்குத் தயக்கமாக இருக்கிறது

2 comments:

  1. May be to trusted few in closed group please explain and enlighten.

    ReplyDelete
  2. Sir antha velakathai enakku sollungkal allathu ennumperukku smsaka anuppungkal numper8939687364

    ReplyDelete