Monday, July 13, 2015

மகா கோதாவரி புஷ்கரம்


ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை ‘கோதாவரி புஷ் கரம்’ விழா நடைபெறுவது உண்டு. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடக்கும் ‘கும்ப மேளா’ போல ஆந்திராவில் நடக்கும் ‘கோதாவரி புஷ்கரம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது.

‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கையாகும். இறுதியாக கடந்த 2003–ம் ஆண்டு ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் ‘புஷ்கரம் விழா’ நடைபெற்றது.

அதன்பின் 12 ஆண்டுக்கு பிறகு தற்போது கோதாவரி புஷ்கரம் விழா ராஜமுந்திரியில் நடக்கிறது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதால் விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் கொண்டாடப்படுவது உண்டு. இதனை ‘ஆதி புஷ்கரம்’ என்றும் அழைப்பது உண்டு.

இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோதவரி ஆறு மராட்டிய மாநிலம் நாசிக்கில் உதயமாகி தெலுங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து வங்ககடலில் கலக்கிறது. எனவே கோதாவரி ஆறு பாயும் மராட்டியம், தெலுங்கானா, ஆந்திராவில் இந்த புஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

குருபகவான் நாளை (14–ந்தேதி) காலை 6.25 மணிக்கு கோதாவரி ஆற்றில் பிரவேசிக்கிறார். அந்த நேரத்தில் புனித நீராடுவது சிறப்பானது என கருதப்படுகிறது.

நாளை தொடங்கும் விழா வருகிற 25–ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.

மொத்தம் 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராட ராஜமுந்திரி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் வசதிக்காக ஆந்திரா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது.

கோதாவரி வரும் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். சிலர் கோதாவரி நதிக்கு ஆராதனை செய்வார்கள். இந்த பூஜைகள் நடத்த ஆந்திர அறநிலையத்துறை சார்பில் 4295 பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜமுந்திரியில் நாளைய முகூர்த்த நேரத்தில் காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி கோதாவரிக்கு ஆரத்தி எடுத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இதேபோல் கோவூர் கோஸ்பாத சேத்திரம் நதியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்கர நீராடுகிறார்.


ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலத்தில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும் கோவில்கள் வருமாறு:–

பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).

No comments:

Post a Comment