Monday, September 1, 2014

திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?




திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?  என்று கேட்ட கேள்விக்கு

‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’

‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.
வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.. ‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ – என்று கேட்டார் பெரியவர்.

‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.
ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?

‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி. அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது!

திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின், அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’ என்றார்.

பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்று பணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம்.

ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?

கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக் கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:

‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம்.

அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன். அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன்
நன்றி; தீபம் இதழ்

இப்படி திருப்பதி குறித்து பல ரசமான எண்ணங்கள்…
( இதைச் சொல்லி ஒரு வேற்றுமையைச் சிந்திப்பது பெரியவர் எண்ணமில்லை. சர்ச்சையை உருவாக்குவதும் அவர் நோக்கமில்லை. கி.வா.ஜ., ஒரு தமிழாந்த அறிஞர். இதிகாச புராண ஆராய்ச்சி உடையவர். அவரோடு உரையாடும்போது அவருக்குப் பயன்தரும் விதமாயும், ஆழ்ந்த சிந்தனைகளோடும் உரையாடுவதே பெரியவர் நோக்கம்.)

Thank : madambakkamshanks@yahoo.com 
https://thiruppugazhamirutham.blogspot.com/2012_12_01_archive.html

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete