Thursday, June 16, 2016

தவ ஜநநி தாடங்க மஹிமா [ ஸ்ரீ வராஹி ]

“தவ ஜநநி தாடங்க மஹிமா”
 [ ஸ்ரீ வராஹி ]
அம்ருத மதன காலத்தில் அம்ருதம் திரண்டு வருவதற்கு முந்தி தேவாஸுரர்களை ஜ்வாலையால் பொசுக்கி விடுகிற மாதிரி காலகூடவிஷம் வந்தது. அம்ருதம் எடுத்து சாப்பிடுவதற்கு ஈச்வரனைக் கூப்பிடாத தேவர்கள் ப்ராணாபத்து வந்த போது அபயம் என்று ஓடினார்கள். அவனும் “இப்பத் தான் வழி தெரிஞ்சதோ?” என்று கேட்காமல் பரம காருண்யமாக அந்த கால கூடத்தை அப்படியே உருட்டி சாப்பிட்டு விட்டான்.


“தாலி பாக்யம், தாலி பாக்யம்” என்கிறோமே – பெரிய ஆக்ஸிடண்ட், வைத்யமே கிடையாது என்று இருக்கிற ஒரு மஹாரோகம் ஆகியவற்றிலும் ஒருத்தன் தப்பிப் பிழைத்தால், அது அவன் பெண்டாட்டியுடைய தாலிபாக்யத்தால் தான் என்கிறோமே – அப்படி அம்பாளுடைய தாலி பாக்யத்தால் தான் ஸ்வாமி மகாப்ரளயத்திலாகட்டும், கால கூட பானத்தின் போதாகட்டும் தப்பித்தது. அந்த தாலி பாக்யத்தைத் தான் அம்பாளுடைய “தாடங்க மஹிமா” என்று ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார்.


வேதம் ச்ருதி என்றால், ரிஷிகள் பண்ணிய தர்ம சாஸ்த்ரங்களும், கிருஷ்ண பரமாத்மா உபதேசித்த கீதையும் ஸ்ம்ருதி என்பார்கள்.ஆசார்யாள் வாக்கையும் ஸ்ம்ருதியோடு சேர்க்கலாம். ஸ்வாமிக்கு ‘அம்பாள் மருந்து’ என்ற ச்ருதி வாக்கைத்தான் ஆசார்யாள் இங்கே ஸ்ம்ருதி வாக்காகக் கொடுத்திருக்கிறார். அப்படியே காப்பியடித்தால் அழகில்லை என்பதால், ஸ்வாமியின் உயிரை ரஷிப்பது அம்பாள் என்றே திருப்பிச் சொல்லாமல், (அவ்வாறு ரஷிப்பது) அவளுடைய ஸெளமாங்கல்யச் சின்னமான தாடங்கம் என்று நூதன நயம் சேர்த்து சொல்லியிருக்கிறார் ‘தாலி பாக்யம்’ என்று பொதுவில் சொல்வதைத் ‘தாடங்க மஹிமை’ என்கிறார்.வேடிக்கையாக, அந்தத் தாடங்கமும் தாலி தான். இதிலென்ன புதிர் போடுகிறேனே என்றால் நான் ஒன்றும் புதுசாகச் சொல்லவில்லை. காளிதாசன் சொன்னதைத் தான் ஒப்பிக்கிறேன். “தாலீ பலாச தாடங்காம்” (ச்யாமளா, நவரத்ன மாலிகை – ச்லோகம் 6) என்பது காளிதாசன் வாக்கு, தாலம், தாலீ என்றால் பனை. பலாசம் என்றால் புரசு என்ற ஒரு அர்த்தம். ‘பலாச’ ம்தான் திரிந்து ‘புரசு’ ஆயிற்று என்று தோன்றுகிறது. இன்னொரு அர்த்தம், எந்த இலைக்குமே ‘பலாசம்’ என்று பெயர். ‘தாலீ பலாசம்’ என்றால், பனையோலை என்று அர்த்தம். ஆதி காலத்தில் ஜனங்கள் படாடோபமில்லாமல் எளிமையாயிருந்தபோது ஸ்த்ரீகளுடைய பரம ஸெளமாங்கல்ய ஆபரணங்களான மங்கள ஸுத்ரப் பதக்கம், காதுத் தோடு இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்திருக்கின்றன. அதனால் மங்கள ஸுத்ரப் பதக்கமாயிருந்த ஓலை நறுக்குக்கே தாலி என்று பேர் வந்துவிட்டது. காதிலும் அந்த ஓலையைச் சுருட்டித்தான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன் அநேக குடியான ஸ்திரீகள் அப்படிப் போட்டுக்கொண்டு பிற்கால ஜம்ப வழக்கங்கள் வராத ஆதி நாளில் ப்ராஹ்மண ஸ்த்ரீகள் உள்பட காளிதாஸன் வாக்குப்படி ஸாஷாத் பராசக்தி உள்பட – எல்லோரும் ஓலைத் தோடுதான் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதனால்தான் பிற்காலத்தில் ஏகச் செலவில் வைரத்தோடு போட்டுக் கொண்டபோதுகூட அதை ‘வைர ஓலை’ என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.


‘கம்மல்’ என்றும் தோட்டைச் சொல்வது. ‘கமலம்’  ‘கமல்’ என்பதுதான் அப்படி ஆனது. நடுவே ஒரு கல், சுற்றிலும் ஆறு என்று, நடுவே கர்ணிகையும் சுற்றி இதழுமாக ஒரு தாமரை இருக்கின்றாற்போலத் தோடு கட்டியதால் ‘கமலம்’ என்று பேர் வைத்துக் ‘கம்மல்’ ஆயிற்று. அப்படிக் கட்டடப்படுகிற வைரக் கல்லுக்கும் அதனாலேயே ‘கமலம்’ என்ற பெயர் வந்தது. “நல்ல உடானி கமலம்” என்று உசந்த வைரத்தைச் சொல்வார்கள்…இத்தனை ஜம்பம், டம்பம், டாம்பீகம் வந்துவிட்ட இன்றைக்கும் அம்பாள் பூஜையில் அவள் போட்டுக்கொள்கிற பரம எளிமையான கருகுமணியும் பச்சோலையுமே ஸுமங்கலிகளுக்குக் கொடுக்கிறோம்.


‘தாலியில் தாலம் (பனை) என்று தெளிவாகவே தெரிகிற தென்றால், ‘ தாடகம் ‘ என்ற ச்ரோத்ராபரணமும் (காதணியும்) ‘தார’த்தின் அடியாகப்பிறந்ததுதான். ‘தாரம்’ என்பது ‘தாடம்’ என்றும் ஆகும், ‘அங்கம்’ என்றால் சின்னம். தாடத்தாலான மங்களச்சின்னம் ‘தாடங்கம்’, ‘தாட பத்ரம்’ என்று கூட அந்த ஆபரணத்தைச் சொல்வதுண்டு. ‘தாலீ பலாசம்’ என்ற பனையோலையே ‘தாட பத்ரம்’ என்பதும். ‘தாடகம்’ என்பதே அப்பறம் ‘தாடங்கம்’ என்று வந்திருக்கிறது. தோடு, அதற்கு வேறாகக் குண்டலம் (இந்த நாள் லோலாக்கு, ஜிமிக்கி) என்று இல்லாமல், தோடு குண்டலம் இரண்டும் சேர்த்துப் பண்ணிய நகை தாடங்கம் என்று தோன்றுகிறது.


தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். ஸுமங்கலித்வம் போனால் கழுத்தை விட்டுத் தாலி இறங்குவது போலவே காதை விட்டுத் தோடோ, தாடங்கமோ இறங்கிவிட வேண்டும். அதனால் ஒரு புருஷனின் நல்ல ஆயுர்பாவத்தை, பெரிய கண்டத்தில் கூட அவன் பிழைப்பதைத் ‘தாலி பாக்யம்’ என்று சொல்கிற மாதிரி ‘தாடங்க பாக்யம்’ என்றும் சொல்ல ந்யாயமுண்டு. அதைத்தான் ஆசார்யாள் ‘தாடங்க மஹிமை’ என்கிறார். “பங்கு போட்டுக் கொண்டு அம்ருதம் சாப்பிட்ட அத்தனை தேவர்களும் அழிந்து போனார்கள். யாருக்கும் பங்கில்லாமல், தானே மிச்சம் மீதியில்லாமல் விஷத்தைச் சாப்பிட்ட உன் பதி அழிவே இல்லாமலிருக்கிறதானென்றால் அது உன் தாடக் மஹிமைதானம்மா. “தவ ஜநநி தாடங்க மஹிமா” என்கிறார்.


ச்ரோத்ரத்திற்கு விசேஷம் ஜாஸ்தி. பஞ்ச பூதங்களில் உசந்ததான ஆகாச தத்வத்தில் எழுகிற சப்தத்தை க்ரஹிப்பதாகப் பஞ்சேந்திரியங்களில் இருப்பது அதுவே. வேதம் பூராவுமே இப்படி ச்ரோத்ரத்தால் க்ரஹிக்கப்பட்டதால் தானே ச்ருதி எனறே பேர் பெற்றிருப்பது? உபதேசங்களையெல்லாம் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரந்தான். அம்பாள் தான் குரு ஸ்வரூபிணியானாலும் அத்தனை ஆகமங்களையும் மந்திரங்களையும் அவள்தான் சிஷ்யையாயிருந்து பதியும் குருவுமான ஈச்வரனிடமிருந்து தன்னுடைய ச்ரோத்ரத்தினால் கேட்டுக்கொண்டாள்.  எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய ப்ரார்த்தனை, ஸ்தோத்ர கீர்த்தனை எல்லாவற்றையும் அவள் கேட்டுக் கொள்வது ச்ரோத்ரத்தினால் தானே?


இதனாலெல்லாந்தானோ என்னவோ, அம்பாளுடைய தாடங்கத்தில் நம்முடைய ஆசார்யாளுக்கு ரொம்ப பக்தி, பற்றுதல். ‘ஸர்வ மங்களா’ எனப்படும் அம்பாளுக்கு மங்களச் சின்னம் அது. ஸுர்ய சந்திரர்களே அவளுடைய இரண்டு காடகம் என்று ஸஹஸ்ரநாமத்தில் வரும்: ‘தாடங்க யுகளீ – பூத தபனோடுப மண்டலா’ என்று அதே ஸுர்ய நமக்குப் பால் கொடுக்கிற அம்மாவின் இரண்டு வக்ஷோருஹங்கள் என்று ஆச்சார்யாள் இந்த ஸெளந்தர்யலஹரியிலேயே சொல்லியருக்கிறார். (ச்லோகம் 34) ஆகையால் அந்தத் தாடங்கங்களும் ஒரு பக்கம் பரமேச்வர பத்னியின் ஸெளமாங்கல்யச் சின்னம், இன்னொரு பக்கம் குழந்தைகளான நமக்கெல்லாம் பாலூட்டுகிற மாத்ருவாத்ஸல்யத்தின் சின்னம் என்றும் ஆகிறது. ஆகையாலே தான் ஜம்புகேச்வரத்திலே அகிலாண்டேச்வரியின் சக்தி ஜனங்கள் தாங்க முடியாத அளவுக்கு ஆனபோது அவர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி அதில் அதிகப்படி சக்தியை ஆகர்ஷணம் பண்ணி அம்பாளை சமனப்படுத்த நினைத்தபோது அந்த ஸ்ரீ சக்ரத்தை தாடங்க ரூபத்தில் பண்ணி அவளுடைய ச்ரோத்திரத்திலேயே ப்ரதிஷ்டித்து விட்டார் ப்ருத்வி க்ஷேத்ரமும், ப்ருத்வியின் மத்ய ஸ்தானமுமான காஞ்சீபுரத்தில் அம்பாள் காமாக்ஷியின் சக்தி இதே மாதிரி அபரிமிதமாயிருந்தபோது அவளுக்கு எதிரே ப்ருத்வியிலேயே – பூமியிலேயே – ஸ்ரீ சக்ர – ஸதாபனம் பண்ணினார். அது அவருடைய ஜீவிதத்தின் கடைசியில். ஜம்புகேச்வரம் அப்பு க்ஷேத்ரம். அதற்காகக் காவேரியில் யந்த்ரம் ஸ்தாபிக்க முடியுமா? அப்பு மட்டுமில்லை: தேயு, வாயு, ஆகாசம் எதிலுந்தான் (யந்த்ரம் ஸ்தாபிக்க) முடியாது. ப்ருத்வியில் மட்டுமே முடியுமாதலால் அப்படிக் காஞ்சியில் பண்ணினார் ஜம்புகேச்வரத்தில் என்ன பண்ணினாரென்றால் காவேரிக்கும் மேலே ப்ரவாஹமாக அம்பாளுடைய மங்களமான சிவ சித்தம் பெருக வேண்டும், பால் கொடுக்கிற வாத்ஸல்ய சித்தமும் பெருகவேண்டும் என்று நினைத்து இரண்டுக்கும் பொதுச் சின்னமாக இருக்கிற தாடக்த்திலேயே ஸ்ரீசக்ரத்தை அடக்கி யந்த்ரத்திற்கு யந்த்ரம், ஆபரணத்திற்கு ஆபரணம் என்பதாக அதை அவளுக்குச் சார்த்திவிட்டார். எப்படி இந்த ஸெளந்தர்யலஹரி தந்த்ர சாஸ்த்ரமாயும் தத்வத்தைத் தெரிவித்துக்கொண்டு, காவ்ய ஸ்தோத்ரமாகவும் அழகைத் தெரிவிக்கிறதோ, அப்படியே அந்தத் தாடங்கங்களும் சாஸ்த்ர ரீதியில் ஜனங்களுக்கு ரக்ஷணை கொடுத்துக்கொண்டு, அதே ஸமயம் அம்பாளுக்கும் அழகு செய்கிற – அழகுக்கு அழகு ஸமயம் அம்பாளுக்கும் அழகு செய்கிற – ஆழகுக்கு அழகு செய்கிற – ஆபரணமாகுவும் இருக்கும்படியாகப் பணிணிவிட்டார்.ஸ்ரீ சக்ர, சிவசக்ர ரூபமான தாடங்கங்கள் என்று அவற்றைச் சொல்வது. ‘ஸ்ரீ சக்ரத்திலேயே ஒன்பது ஆவரண சக்ரங்கள் இருப்பதில் நாலு சிவ சக்ரங்கள்தான். ஐந்து அம்பாளுடையது. தம்முடைய ஸ்தோத்ரத்திலேயே முன் ச்லோகமொன்றில் (ச்லோக.11) “சதுர்பி: ஸ்ரீகண்டை: சிவயுவதி: பஞ்சபிரபி” என்று இதையும் சொல்லியிருக்கிறார். இங்கே ஸ்வாமியை ‘ஸ்ரீ கண்டன்’ என்றும் அம்பாளை ‘சிவயுவதி’ என்றும் சொல்லியிருப்பது ‘தாடங்கமஹிமா’ ச்லோகத்தோடு பொருத்தமாக அன்வயிக்கிறது. ‘ஸ்ரீ கண்டன்’ என்றால் நீலகண்டன்தான். விஷத்திற்கும் ‘ஸ்ரீ’ என்று பெயர் இருப்பதை வைத்துத்தான் ‘ஸ்ரீகண்டன்’ என்பது. தாடங்க மஹிமை ச்லோகத்தில் விஷம் சாப்பிட்டவன் அழிவில்லாமலிருக்கும் அதிசயத்தைத்தான் சொல்கிறார். ‘சிவயுவதி’ என்று அவளை அவனுடைய பத்னியென்று பேர் கொடுத்துச் சொல்லியிருப்பது அவளுடைய ஸெளமாங்கல்யத்தையும் உக்ரமில்லாத, ரௌத்ரமில்லாத சிவமான அநுக்ரஹ சித்தத்தை தெரிவிப்பதாகவும் இருக்கிறது.


இவளை ‘ருத்ரஸ்ய பேஷஜீ’ என்று வேதம் சொல்லிற்று. ஆசார்யாள் நாளில் இவளுடைய சத்தியே ஜனங்களுக்கு ரௌத்ரமாகத் தாங்க முடியாமல் ஆயிற்று. வாஸ்தவத்தில் அது ரௌத்ரமாகவில்லை. கலி கால ஜனங்களின் சக்தி குறைந்து போனதால் தான் அம்பாள் மூர்த்தத்தில் ஆதியில் பிரதிஷ்டையாயிருந்த நிறைவான ஜீவ கலா சத்தியை அவர்களால் தாங்க முடிய வில்லை. நமக்கு உடம்புக்கு வந்து பலஹீனமாகிறபோது புஷ்டியும் ஆரோக்யமும் தரும் நல்ல ஆஹார வஸ்துக்களே ஜெரிக்க முடியாமலாகிக் கஞ்சிதான் நல்லது என்று ஆகிறதல்லவா. அப்படி அம்பாளடைய அநுக்ரஹ சக்தியையே அப்போது ‘டைல்யூட்’ பண்ணினால் தான் தாங்கிக்கொள்ள லோகத்திற்குச் சத்தி இருந்தது. அப்போது தான் ஆசார்யாள் எக்ஸ்ட்ரா சக்தியை ஸ்ரீசக்ர தாடங்கங்களில் அடக்கி, அதையும் அவளுக்கே ஆபரணமாகப் போட்டார்.


ச்லோகத்தில் அவர் சொல்கிற விஷ பானக் கதையில் அவருக்கு மூலவரான ஈச்வரனுக்கு அவள் உக்ரமான விஷத்தைக் கண்ட பூஷணமாக்கினாளென்றால், அவரோ அம்பாளுடைய உக்ரத்தையே – அதாவது ஜனங்களின் அபல ஸ்திதியில் உக்ரமாகத் தோன்றிய ஜீவகலையையே – அவளுக்குக் கர்ண பூஷணமாக்கினார்.


ஒரு விஷயத்திற்குச் சின்னமாக ஏதோ ‘ஸிம்பல்’ என்று வைக்காமல், மனஸிலே ஆழமாகப்பட்டு – முக்யமாக மஹான்கள், ரிஷிகள் மனஸில் ஆழமாகப் பட்டு – அந்த ஸிம்பலை வைக்கும்போது அந்த மூலமான விஷயத்துக்கே சின்னம் புஷ்டி சேர்ப்பதாக ஆகிவிடுகிறது. இந்தச் சின்னத்துக்கு ஹானி ஏற்பட்டால், இது போய்விட்டால் அது மூலமான விஷயத்திற்கே ஹானி உண்டாக்குகிறது. சின்னத்திற்கே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடுவதால் இப்படி நடக்கிறது. ப்ரஹ்மண்யத்திற்குச் சின்னமான உபவீதம் (பூணூல்) போட்டுக் கொண்டால் ப்ரஹ்மண்யமே விருத்தியாகிறது. அது அறுந்து போனால், காணாமல் போனால் ஏதோ தீட்டு வந்துவிட்ட மாதிரி காயத்ரிகூட மங்கிப் போகிறது. மஹான்கள், ரிஷிகள் என்றில்லாமல் பஹுஜனங்கள் மனஸாழத்தில் மதிப்பாக வைக்கிற சின்னங்களைப் பார்த்தாலுங்கூட இப்படியே இருக்கிறது. தேசியக்கொடி என்பது ஒரு சின்னந்தான், அதற்கு அவமதிப்பு நடக்கிறது என்றால் தன்னால் மனஸ் பதறுகிறது. அது அறுந்து விழுந்தால் நிஜமாகவே தேசத்திற்கு ஆபத்து வருகிறது. இந்தப் பகுத்தறிவு யுகத்திலும் கொடி, கான்ஸ்டிட்யூஷன் புஸ்தகம் முதலியவற்றை அவமதித்தால் கடுமையாக சிக்ஷிக்க வேண்டுமென்று சட்டம் பண்ணியிருக்கிறார்கள். பைபிள் புஸ்தகம் ஒரு சின்னந்தான். ஆனாலும் நல்லவழியிலே போவதற்கான புஷ்டியைக் கொடுக்கும் ஜீவ சத்தி அதற்கே இருக்கிறது என்று அபிப்ராயத்தில்தான் அமெரிக்கா ப்ரெஸிடன்ட் கூட அதைக் கையில் வைத்துக் கொண்டு விச்வாஸ ப்ராமாணம் எடுத்துக் கொள்கிறான்.சின்னத்தால் அது ஸிம்பலைஸ் செய்யும் விஷயத்திற்கே ஹானி – விருத்திகள் ஏற்படுகிறது என்பதற்காகச் சொல்ல வந்தேன். தாடங்க விஷயம் அப்படித்தான். அதாவது பதிக்கு ஹானி என்றால் தாடங்கம் இறங்கவேண்டும் என்பது மட்டுமில்லை, அந்தத் தாடங்கம் இறங்காதிருந்தால் பதிக்கு ஹாணியே ஏற்படமுடியாது. அம்பாளுக்குக் கல்யாணத்தின் போது ஸுமங்கலி என்று சின்னம் பூட்டுகிறபோது தாடங்கம் போட்டிருப்பார்கள். ஸாஷாத் அம்பாளும் ஸ்வாமியுமே அதை அப்படி (ஸெளமாங்கல்ய சின்னமாக) நினைத்திருப்பார்கள். அப்போது அதற்கு வாஸ்தவமாகவே எப்படிப்பட்ட ‘வால்யூ’வும் ‘பவ’ரும் ஏற்பட்டிருக்கும்? ஈச்வரனுக்கு அம்பாள் ஜீவ ரஷை என்றால் அவளுக்கு அந்தத் தாடங்கம் ஸெளமாங்கல்யரக்ஷையாக ஆகியிருக்கும். அதற்கே ஒரு ஜீவ சக்தி உண்டாகி அப்படி ரக்ஷித்திருக்கும். அந்த ரஷை அவளைவிட்டு எங்கேயாவது சுழலுமா, இறங்குமா? இறங்கவே இறங்காது. ஸாக்ஷாத் அம்பாளுக்கு ரக்ஷையாக இருக்கும் ஸ்தானத்தை அது கொஞ்சங்கூட விட்டுக் கொடுக்காது தானே? அது அப்படிப் பிடிவாதமாக “இறங்க மாட்டேன்” என்று உட்கார்ந்திருக்கும்போது ஸ்வாமிக்கு விஷத்தாலோ, ப்ரளயத்தாலோ ஒரு ஹானியும் வரமுடியாது அது தான் ஆசார்யாள் சொல்லும் தாடங்க மஹிமா.ஆனால் ‘அல்டிமேட்’ டாக எல்லா மஹிமையும் ஸகல சக்தி மூலமான அவளைச் சேர்ந்தது தான். அவள் கொடுத்தே ஒவ்வொரு வஸ்து ஒவ்வொரு மஹிமையைப் பெறுகிறது. மஹிமை வாய்ந்த எது இருந்தாலும் அது “மம தேஜோம்ச ஸம்பவம்” (“என் சக்தியின் அம்சமாகத் தோன்றியதே”) என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஆசார்யாளும் “தவ ஜநநி தாடங்க மஹிமா”, “அம்மா, உன்னுடைய தாடங்க மஹிமை” என்று குறிப்பாலுணர்த்திச் சொல்லியிருக்கிறார்.


——ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகசேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்மாதா ச பார்வதீ தேவீ, பிதா தேவோ மஹேஸ்வர:, பாந்தவா: சிவபக்தாஸ்ச, ஸ்வதேசோ புவனத்ரயம் ||***“தேவி வராஹி”MAHA VARAHI PHOTOஸ்ரீ வராஹி மூல மந்திரம்:  “ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹ:”
பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை  செய்ய வேண்டும்.
இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

No comments:

Post a Comment