Monday, April 4, 2016

தில்லை நடராஜரின் கேரள வாசம்

Thank: Sunder Subramaniam

35 ஆண்டுகள் கேரளத்தில் வாசம் செய்த நடராஜர்!!!
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரத்திலிருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிதம்பரம் கொண்டு வரப்பட்டார் என தல வரலாறு கூறுகிறது.

முகலாயர் படையெடுப்பின் போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் கி.பி. 1648-ல் தில்லை ஸ்ரீநடராஜரையும் ஸ்ரீசிவகாமி அம்மையையும் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்க எண்ணினராம்.
இரண்டு மரப் பேழைகளில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் அமரச் செய்து இரவு நேரங்களில் மட்டுமே பயணம் மேற்கொண்டு, தில்லைக்கு தென்பகுதியாக விளங்கும் மதுரையை நோக்கிச் சென்று குடுமியான்மலையை அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு ஒரிடத்தில் பூமியிலே குழி தோண்டி பேழைகளை மறைத்து வைத்து அந்த இடத்தில் ஒரு புளிய மரத்தையும் நட்டனர். பின்னர் தில்லை திரும்பினர்.
தில்லையில் அமைதி திரும்பிய சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, தில்லை வாழ் அந்தணர்களின் இளம் தலைமுறையினர் குழுக்களாகப் பிரிந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு பிரிந்து சென்றவர்களில் ஒரு குழுவினர் புளியங்குடியை அடைந்தனர். அங்கே பல பேர்களிடமும் விசாரித்தனர். யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், ஒரு வயதான குடியானவன் தன்னுடைய வேலையாளிடம், இந்த மாட்டைக் கொண்டு போய் அம்பலப் புளியில் கட்டு என்றாராம். இதைக் கேட்டதும் இவர்களுக்கு அது குறித்த விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியுள்ளது. அந்த வேலையாளிடம் கேட்ட போது அவன், எனக்கு எதுவும் தெரியாது, எங்கள் முதலாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

முதலாளியிடம் சென்று கேட்ட போது அவரோ, இங்கே ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல காலங்களாக இந்த பகுதியில் வாழ்ந்து வந்தார். தினமும் இந்த அம்பலப் புளி அடியில் வழிபட்டு வந்தார். அவர் தான் அந்த சிறிய பொந்தில் திருவுருவங்களைக் கண்டாராம்.

இந்த இடத்தில் விலைமதிப்பில்லாத ஒரு சுவாமி இருக்கிறார் என்றும், அதனை அறிந்தவர்கள் ஒரு நாள் இங்கே வருவார்கள். அதுவரை இதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்கள் உண்மையானவர்களா என்று சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொன்னார் என்றார்.
இவர்களோ, நாங்கள் தான் அந்த மூலமூர்த்தியின் உரிமைதாரர்கள் என்று விளக்கி அவரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு தில்லையை அடைந்தார்கள்.
பின்னர் பல நூறு தில்லைவாழ் அந்தணர்கள் அந்த இடத்தை அடைந்து, தக்க ஆதாரங்களை விளக்கிச் சொல்லி, அவர் சம்மதத்துடன் அந்த இடத்தைத் தோண்டி தில்லை நடராஜரையும், சிவகாமி அம்மையையும் வெளியே எடுத்தனர்.

பின்னர் தக்க பாதுகாப்புடன் அதே போன்ற பேழைகளில் வைத்து தில்லை நோக்கி எடுத்து வந்தனர்.

வரும் வழியில் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலின் சபாபதி மண்டபத்தில் சிலகாலம் வைத்திருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோயில் வழியாக தில்லைக்கு வந்தார்கள்.
1686-ல் மறுபடியும் தில்லையில் பொன்னம்பலத்தில் ஸ்ரீநடராஜரையும், ஸ்ரீசிவகாமி அம்மையையும் பிரதிஷ்டை செய்து, பல திருப்பணிகள் செய்து, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது.
-தினமணி
------------
இது முற்றிலும் உண்மை. முகலாயர் படையெடுப்பின்போது சிதம்பரம் கோயிலை தகர்க்க முற்பட்டனர். தீட்சிதர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தன் இன்னுயிரை ஈந்து கோயிலை காப்பாற்றினர். கோயிலில் உள்ள சிலைகள் வேறு இடத்திருக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற முத்துகுமார(முருகன்) சுவாமி சிலை தில்லை நடராஜர் கோயிலுக்கு சொந்தமானது.


No comments:

Post a Comment