Saturday, March 7, 2015

மலேசியா பத்துமலை வாழ் மௌன குரு சித்தர் ஜீவசமாதி


Thank 



"நன்நயமாம் நவகோடி நாதாக்கட்கும் 
நானிலத்தில் கோடி யுக ரிஷியார்கட்கும் 
உண்மையாய் தவமியற்றும் முனிவர்கட்கும் 
ஊழகற்றி ஞானம் கண்ட சித்தர்கட்கும் 
மனத்தடக்கி வாழுகின்ற காறுக்கட்கும்
மௌன நிலை நிற்கின்ற ஞானிகட்கும்
எனது மனம் அடக்கி மிக சரணம் சொன்னேன் 
ஏந்துகின்றேன் சிரமதிலே பதமே போற்றி!"   

- சித்தர் பூசை தொகுப்பு, அகத்தியர்  வனம்

மௌன குரு சித்தர் சமாதி, பத்து மலை (மலேசியா)

எனக்குள் சித்தர்களை பற்றிய ஆர்வத்தை முதலில் எழுப்பியவர் திரு பலராமன் ஐயா அவர்கள். இவர் ஒரு கைதேர்ந்த சித்த மருதுவரும்கூட. ஒரு நாள் இவரிடம் மருந்துகளை வாங்க சென்ற பொழுது, சித்தர்களை பற்றி பேசுகையில், பத்து மலை அடிவாரத்தில் மௌன சித்தர் சமாதி ஒன்று இருக்கிறது, அங்கே சென்று அவரை வழிபடுங்கள் என்று கூறினார். ஒரு நாள் பத்து மலைக்கு சென்ற போது அந்த சித்தர் சமாதியை நானும் என் மனைவியும் தேடினோம். அது சனீஸ்வரர் சந்நிதிக்கு அருகில் உள்ளது. அன்று முதல், எப்போதெல்லாம் பத்து மலைக்கு சென்றாலும், நானும் என் மனைவியும் சித்தர் சமாதிக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பிராத்தனை செய்வோம்.
மௌன குரு சித்தர் சமாதியை பற்றி மகாகுரு அகத்தியப் பெருமான் கல்லார் அகத்திய ஞான பீடத்தில் உள்ள ஜீவ நாடியில் பல முறை குறிப்பிட்டுள்ளார். மலேசியா மற்றும் சிங்கபூரிலிருந்து ஜீவ நாடியை பார்க்க சென்றோர்களிடம் மௌன குரு சித்தர் சமாதிக்கு சென்று பிராத்தனை செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். வேறு எதுவும் அவரை பற்றி நாடியில் குறிப்பிடவில்லை. இவரை பற்றிய முழுமையான தகவல் யாரிடமும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.  உங்களை (மௌன குரு சித்தர்) பற்றிய தகவல்கள் எங்கேயாவது கிடைக்காத என்று பல முறை நான் வேண்டியதுண்டு.
சில மாதங்களுக்கு பிறகு, மௌன குரு சித்தரின் வரலாற்றை தெரிந்துக் கொள்ள பத்து மலையின் தலைமை குருக்களான திரு ரவிநாதன் ஐயா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அவரிடம் மௌன குரு சித்தரை பற்றி வினாவிய போது:

"மௌன சாமி என்பவர் சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகள் பத்து மலை குகைக்கோவில் உள்ளே வாழ்துவந்தார். பத்து மலை கோவில் படிக்கட்டுகள் கட்டும் முன்னமே அவர் அங்கே வாழ்த்து வந்தார். யாரிடமும் அவர் பேசியதில்லையாம். அதன் காரணமாக அனைவரும் அவரை மௌன சாமி என்று அழைத்தார்கள். தற்போது வேலாயுதம் இருக்கும் இடத்தில் அவர் ஒரு குடிலமைத்து தங்கி, யோக சாதனைகளை மேற்கொண்டார்.  சேவையின் அடிப்படையில் முருகன் சந்நிதானத்தை சுத்தம் செய்வது இவரது வழக்கம். பக்தர்கள் முருகனுக்கு படைக்கும் பால் மற்று பழங்களை உண்டு வந்தார். வேறு எதுவும் அவர் சாப்பிடுவதில்லை.

பிறகு 1936-ஆம் ஆண்டில் மௌன சாமி பத்து மலை குகைக்கோவிலில் தன் உடலை துறந்தார். ஒரு யோகியின் உடலை தகனம் செய்யகூடாது என்ற அடிப்படையில், பக்தர்கள் மௌன சாமியின் உடலை குகைக்கோவிலிலிருந்து  கிழே கொண்டு வந்து அடக்கம் செய்தார்கள். பிறகு அந்த இடத்தில் ஒரு சமாதியை எழுப்பி, தீபம் ஏற்றி பிராத்தனை செய்து வந்தார்கள். சில காலம் கழித்து, அந்த சமாதியின் மேல் புற்று ஒன்று தோன்றியது. அந்த புற்றின் மேல் ஒரு வயதானவரின் உருவம் போல் ஒரு தடம் இருந்ததாம். மௌன சாமியை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சமாதிக்கு சென்று தீபம் ஏற்றி பிராத்தனை செய்து வந்தார்கள். காலப்போக்கில், அந்த இடத்தை புல் வெட்டும் இயந்திரங்களை வைக்கும் ஸ்டோராக ஆலய ஊழியர்கள் பயன்படுத்தினார்கள். பக்தர்கள் இந்த இயந்திரங்களை கடந்து சென்றுதான் மௌன சாமியின் சமாதியில் தீபம் ஏற்றினார்கள்.

காலப்போக்கில் மௌன சாமியின் சமாதியை யாரும் பொருட்படுத்தவே இல்லை. 2005-ஆம் ஆண்டு பத்து மலை ஆலய நிர்வாகம், திரு ரவிநாதன் ஐயா அவர்களின் ஆலோசனைப்படி, மௌன சாமி சமாதியின் மேல் ஒரு சிவ  லிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்ய முடிவெடுத்தார்கள். அதற்க்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. மௌன குரு சித்தரின் சந்நிதி 2008 ஆம் ஆண்டு முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. தினமும் இரண்டு வேளை மௌன குரு சித்தர் சந்நிதியில் அபிஷேகமும் பூசையும்  நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும்  சித்ரா பௌர்ணமி அன்று மௌன குரு சித்தரின் குரு பூசை அனுசரிக்கபடுகிறது. அன்று அபிஷேகமும் சிறப்பு பூசையும் நடைபெற்று, இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

*ஓம் மௌன குரு சித்தர் திருவடிகள் போற்றி!*

மௌன குரு சித்தர் சமாதி, பத்து மலை (மலேசியா) 

No comments:

Post a Comment